Saturday, February 28, 2009

சுஜாதா - ஆண்டு 1 - அரங்கன் நலமா?


எனக்கும் வாத்தியாருக்கும் என்ன உறவு என்று நினைக்கும்போது, தேசிகன் சொல்வது போல் "நமக்கிங்கு உறவேல் ஒழிக்க ஒழியாது" என்றெல்லாம் கூற முடியாது. பரிச்சயம் அத்தனையும் அவரது எழுத்துக்களுடன் மட்டுமே. அம்பலம் சாட்டில் ஒரே ஒரு முறை பேசியிருக்கிறேன்.

அவரை எப்போது வாசிக்க ஆரம்பித்தேன் என்று கரெக்டாக சொல்ல முடியவில்லை. ஆனால், ஆரம்பித்தது கணேஷ்-வசந்த கதைகளிலிருந்து. அப்பருவத்தில், ஒரு பிரச்சினையை அணுகும் கணேஷின் திறமையும், வசந்த்தின் சுட்டித்தனமும், ஜொள்ளும் உடனடியாக ஒரு ஈர்ப்பை உண்டு பண்ணியது. கமல், ரஜினி என்று நடிகர்களுக்கு, அவர்கள் படங்களைப் பார்த்து தீவிர ரசிகர்கள் அமைகிறார்கள். ஆனால், சுஜாதா ஆணா/பெண்ணா என்று கூடத் தெரியாமல், அவரது தனித்துவமான எழுத்து என்ற அடையாளத்தின் பேரில் மட்டும், தீவிர ரசிகராகி, அவரை வாத்தியாராக ஏற்றுக் கொண்ட அக்கால இளைஞர் அனேகர். அடியேனும் அந்த கூட்டத்தில் ஒருவன்.

"பிரிவோம் சந்திப்போம்" ஏற்படுத்திய தாக்கத்தில், பல ஆண்டுகளுக்குப் பிறகு பிறக்கவிருக்கும் மகளுக்கு மதுமிதா என்று பெயரிட்டேன் :)

அந்த subtle (உறுத்தாத) ஹியூமர் அவர் எழுத்துகளில் (அது கதையோ/கட்டுரையோ) விரவி இருக்கும். Non technical ஆசாமிகளுக்குக் கூட புரியும்படியாக, அதே சமயம் சுவாரசியமாக நவீன டெக்னிகல் சமாச்சாரங்களைக் கூட, ஒரு கதை சொல்வது போல சொல்ல ஒரு ஆள் பிறந்து வர, பலப்பல ஆண்டுகள் ஆகலாம்.

இங்கு தமிழ் எழுத்தாளர்களுக்கு பஞ்சமில்லை. அது போல, டெக்னிகல் ஆட்களுக்கும் பஞ்சமில்லை. வாத்தியார் போல எஞ்சினிய்ராக, விரிந்த வாசிப்போடு, ஆங்கிலம்/தமிழ் என்று இரண்டிலும் மிக்க புலமையோடு, மிக்க தன்னடகத்துடன் ஒரு ஆசாமி சல்லடை போட்டுத் தேடினாலும் கிடைக்கப் போவதில்லை :(

இந்த வருட புத்தக கண்காட்சியில், உயிர்மையில் அவரது "கண்ணீரில்லாமல்" என்ற சிறு கட்டுரைத் தொகுப்பை வாங்கினேன். என்ன அது "கண்ணிரீல்லாமல்" என்று பார்த்தால், வாத்தியார் யாப்பு, கர்னாடக/மேற்கித்திய சங்கீதம், ஐன்ஸ்டைன், இந்து மதம் ஆகிய சமாச்சாரங்களை நாம் ரொம்பவும் அழாமல் தன்னிடமிருந்து தெரிந்து கொள்ள அழைக்கிறார் என்று விளங்கியது :) நிஜமாகவே, யாப்பிலக்கணத்தை தெளிவாக புரிந்து கொள்ள முடிந்தது, ஒரே வாசிப்பில், மனதில் நிற்கும் வண்ணம்!

அதான் வாத்தியார் எழுத்தின் சக்தி. யாப்பு சொல்லித் தரும்போது கூட அந்த நகைச்சுவை இருக்கிறதே, "தமிழ் பண்டிதர்களிடம் போகாதீர்கள். "எட்டடி தரவு கொச்சக் கலிப்பா" போன்ற சொற்கள் எல்லாம் கனவில் வந்து பயமுறுத்தும்" என்பார்! யாப்பு பற்றி இதை விட எளிமையாக யாரும் விளக்க முடியாது.

அது போல, 'ரத்தம் ஒரே நிறம்' நாவலில், முத்து என்ற நாவலின் கதாநாயகனுக்கும், மெக்கன்ஸி என்ற பரங்கியனுக்கும் நடக்கும் "கட்டிப்புடி" சண்டையை வர்ணிக்கும்போது, 'முத்து மேல் மெக்கன்ஸி.. மெக்கன்ஸி மேல் முத்து... நிலைமை சற்று குழப்பமாக இப்போது முத்துன்ஸியாக உருண்டார்கள்' என்பார் :)

இரண்டு பதிவுகளில் வாத்தியாரை "இன்னுமோர் நூற்றாண்டு இரும்" என்று வாழ்த்தியிருக்கிறேன், அதாவது 200 ஆண்டுகள். சொல்லி 3 ஆண்டுகளுக்குள் அரங்கனைப் பார்க்க புறப்பட்டுப் போய் விட்டார். இல்லை, அவருக்கு மிகவும் பிடித்த திருமங்கையாழ்வாராகக் கூட இருக்கலாம்!

வாத்தியாரின் மறைவுக்குப் பிறகு வலைப்பதிவர்கள் எழுதிய அஞ்சலிப் பதிவுகளின் இணைப்புகள் இந்த எனது பதிவில் உள்ளன

சுஜாதா தன்னைப் பற்றி: என் எழுத்து, என்னைப் பல தேசங்களுக்கு அழைத்துச் சென்றிருக்கிறது. பல வகைப்பட்ட மனிதர்களைச் சந்திக்க வைத்திருக்கிறது. பிரைவேட் ஜெட்டி லிருந்து ஃப்ரீமாண்ட் மிஷன் பீக் மலை யுச்சி மாளிகை வரை அனுமதித்திருக்கிறது. பெயர் தெரியாத வாசகர்கள் நள்ளிரவில் கூப்பிட்டுப் பாராட்டியிருக்கிறார்கள். மனைவிமார்கள் அழுதிருக்கிறார்கள். கணவன்கள், மனைவிகள் மேல் சந்தேகப்பட்டுத் தற்கொலை செய்து கொள்ளுமுன், கடைசி ஆறுதலுக்கு என்னை விளித்திருக்கிறார்கள். ரோஜா வெளிவந்த சமயத்தில், பெங்களூருக்குத் தனியாக ஓடி வந்த இளம்பெண் அதிகாலை ஜலஹள்ளியில், அரவிந்த சாமியுடன் என்னை மண முடி! என்று கதவைத் தட்டி யிருக்கிறாள். "ஆ" கதையைப் படித்துவிட்டு, "என் மகளை மணம் செய்துகொள்ள வேண் டும்" என்று திருநெல்வேலில் இருந்து வந்த மனநிலை சரியில்லாத இளைஞரும், பாலம் கதையைப் படித்து விட்டு என்னைக் கொல்ல வர தேதி கேட்டிருந்த கோவை வாசியும் என் வாசகர்கள்தான். வாழ்க்கையின் அத்தனை பிரச்னைகளுக்கும், முதுகுவலியில் இருந்து முண்டகோபனிஷத் வரை யோசனை சொல்லியிருக்கிறார்கள்; கேட்டிருக்கிறார்கள். மிகச் சிறந்த நண்பர்களையும், அற்புதக் கணங்களையும் என் எழுத்தால் பெற்றிருக்கிறேன். அதுதான் என்னுடைய நோபெல்!

18 மறுமொழிகள்:

enRenRum-anbudan.BALA said...

test !

Sundar Padmanaban said...

ஞாபகமூட்டாதீங்க பாலா - கஷ்டமாயிருக்கு!

ரவி said...

pass

புருனோ Bruno said...

:(

ramachandranusha(உஷா) said...

முந்தா நாள் இரவு தேசிகன் பதிவு படித்துவிட்டு, ரொம்ப அப்செட் ஆகிவிட்டேன். பன்னிரெண்டு வயதில் வாசிக்க ஆரம்பித்து, இன்றுவரை தொடரும் அந்த எழுத்துகள் "சுஜாதா" - மறக்க முடியுமா? தமிழ் வாசிக்க கண் இருக்கும்வரை, முடியாது.

தமிழ் said...

கண்கள் குளமாகின்றன.

enRenRum-anbudan.BALA said...

வ.சுந்தர்,
உங்கள் உணர்வு புரியாமல் இல்லை. வாத்தியாரின் முதலாண்டு நிறைவு, தேசிகன் ஃபோன் செய்தார். அவர் எழுதியதை வாசிக்கச் சொன்னார். ஏதோ எனக்கும் எழுதத் தோன்றியது :-(

enRenRum-anbudan.BALA said...

செ.ரவி,
என்ன பாஸ் ??? வரவுக்கு நன்றி

புருனோ,உஷாஜி, திகழ்மிளிர்,

உணர்வைப் பகிர்ந்தமைக்கு நன்றி. ஒரு வாத்தியார் தான், அது சுஜாதா தான் :-(

RAJI MUTHUKRISHNAN said...

Thank you for this, Bala. I miss Sujatha too. Last year I posted a tribute to him - http://rajirules.blogspot.com/2008/03/sujatha.html. I shall be grateful if you would include it in your links to other tributes.

மெளலி (மதுரையம்பதி) said...

நீங்க சொல்வது போல நானும் கணேஷ்-வசந்த் மூலமே அவரை ரசிக்க ஆரம்பித்தேன், பிறகு அவரது எழுத்துக்களை தேடித்தேடி படித்தேன்.

ரொம்பவே கஷ்டமாக இருக்கிறது. ஒரு வருடம் போயிடுத்துன்னு நினைக்க முடியல்ல.:-(

enRenRum-anbudan.BALA said...

Raji,
Thanks for sharing. I have added your post link in my "anjali" posting.

மதுரையம்பதி,
வாங்க, சுஜாதா எழுத்துகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்வதே நாம் அவருக்கு செலுத்தக் கூடிய சிறந்த அஞ்சலி என்று நினைக்கிறேன்.

RAJI MUTHUKRISHNAN said...

Nanri, Bala.

கானா பிரபா said...

மிக்க நன்றி பாலா இதைத் தவிர உங்களைப் போன்ற தீவிர வாசகனிடம் இருந்து எதிர்பார்க்க முடியாத சிந்தனை.

enRenRum-anbudan.BALA said...

//மிக்க நன்றி பாலா இதைத் தவிர உங்களைப் போன்ற தீவிர வாசகனிடம் இருந்து எதிர்பார்க்க முடியாத சிந்தனை.
//
நன்றி கானாபிரபா !

இது பாராட்டா, வஞ்சப்புகழ்ச்சியா ? எனக்கு சந்தேகமாகவே இருக்கிறது :)

ஸ்ரீ.... said...

சிறந்த கட்டுரை. மிகவும் நன்றி.

ஸ்ரீ....

கானா பிரபா said...

நிச்சயமாகப் பாராட்டே தான் ;)

கா.கி said...

//அவரது தனித்துவமான எழுத்து என்ற அடையாளத்தின் பேரில் மட்டும், தீவிர ரசிகராகி,..........// nicely put. great post. வாத்தியாருடயது நிஜமாகவே காலம் கடந்த எழுத்துக்கள். இன்றும் புதிதாகவே இருக்கிறது. முடிந்த வரை என் நன்பர்களின் மத்தியில் சுஜாதாவின் எழுத்துக்களை பரப்பிவருகிறேன். and it is needless to say that all of them like it.. :)

தயாஜி said...

சுஜாதாவின் படைப்புகளோடுதான் உறங்குகின்றேன்,,,,,
இறந்தப் பிறகும் "இருப்பது"...
சாதனையல்ல...சரித்திரம்...

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails